search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கோ லாரி டயர்"

    வந்தவாசி அருகே ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 300 டன் எடை கொண்ட சாமி சிலையை எடுத்துச்சென்ற கார்கோ லாரி டயர்கள் பாரம் தாங்க முடியாமல் வெடித்தது.
    வந்தவாசி:

    பெங்களூரு ஈஜிபுரம் பகுதியில் கோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளைக்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஒரே கல்லில் பெரிய அளவில் விஸ்வரூப விஷ்ணு சிலையுடன் 7 தலை கொண்ட ஆதிசே‌ஷன்பாம்பு சிலை ஆகியவை பீடத்துடன் சேர்த்து 108 அடி உயரம் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலைக் குன்றின் அருகில் இதற்கான கற்பாறை இருப்பது செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கற்பாறை அறுத்து எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இந்த பெரிய கற்பாறையில் விஸ்பரூப விஷ்ணு 11 முகங்களுடன், 22 கைகளுடன், சங்கு, சக்கரம் செதுக்கப்பட உள்ளது. தற்போது சுவாமியின் பெரிய நடுமுகம் செதுக்கப்பட்டது. இதன் எடை 380 டன் ஆகும்.

    இந்த சிலை மற்றும் சிலை வைப்பதற்கான பீடத்திற்கான 230 டன் எடையுள்ள பாறை ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெரிய சிலையை எடுத்துச் செல்ல 170 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர் மற்றும் சிறிய சிலையை எடுத்துச் செல்ல 90 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அழுத்தம் தாங்காமல் டயர்கள் வெடித்ததால் அப்போது எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2 சிலைகளின் பக்கவாட்டு பகுதிகளை செதுக்கி சாமி சிலை 300 டன்னாக எடை குறைக்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக சாமி முகம் செதுக்கப்பட்ட கற்பாறையை பெங்களூருக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் 240 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர்கள், 3 இழுவை வாகனங்கள் கொண்டு வரப்பட்டு அதில் சாமி சிலை ஏற்றப்பட்டது.

    பின்னர் நவீன டிரெய்லரை அந்த பகுதியில் இருந்து சாலைக்கு கொண்டு வருவதற்காக இழுவை வாகனங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது,

    நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் லாரி மூலம் இயக்கியபோது மண் சாலைக்குள் டயர்கள் சிக்கியது. இதில் சிலையின் பாரம் தாங்காமல் லாரியின் 6 டயர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு வெடித்த டயர்களுக்கு பதில் வேறு டயர் மாற்றிவிட்டு புதைந்த இடத்தில் லாரி சக்கரம் மண்ணில் சிக்காத வகையில் டயரின் கீழ் பகுதியில் இரும்பு தகடுகளும், கற்களையும் கொட்டி சாலை அமைத்தனர்.

    கடந்த சில நாட்களில் இதன் பலனாக 1000 அடிக்கு மேல் டிரெய்லர் நகர்ந்து கொரக்கோட்டை-செட்டிக்குளம் சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி டிரெய்லர் மீது ஏறி ஏற்றப்பட்ட பெருமாள் சாமியின் நடுமுகம் செதுக்கப்பட்ட கற்பாறை மற்றும் கார்கோ டிரெய்லர், இழுவை வாகனங்களை பார்வையிட்டார். சாமிசிலை செல்லும் வழித்தடம், சாலை வசதி ஆகியவை குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த சிலை ஏற்றிய கார்கோ டிரெய்லர் தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை, செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் வழியாக பெங்களூரு செல்கிறது. பெங்களூரு சென்றடைய 50 நாட்கள் ஆகும்.

    கார்கோ டிரெய்லர் செல்லும் சாலைகளில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் தான் அந்தந்த பகுதிகளை டிரெய்லர் கடக்கும்’ என்றார். #tamilnews
    ×